Ticker

6/recent/ticker-posts

Namma Veettu Pillai Movie Review

நம்ம வீட்டுப் பிள்ளை விமர்சனம் :

பெரிய குடும்பஸ்தரான பாரதி ராஜாவுக்கு மூன்று மகன்கள் , ஒரு மகள். கணவரை இழந்த மகளின் மகன் மற்றும் மகளாக அரும் பொன் ( சிவ கார்த்திகேயன் ) & துளசி ( ஐஷ்வர்யா ராஜேஷ் ) . இவர்கள் குடும்பத்தை எதிலும் சேர்க்காத - மதிக்காத மற்ற உறவினர்களுக்கு இடையில் தங்கையை எதிர்பாராத விதமாக தன்னை எதிரியாக நினைப்பவனிடம் திருமணம் செய்து கொடுத்து, மாப்பிள்ளை - மச்சான் உறவையும் எப்படி சமாளித்தார் மற்றும் குடும்பங்களை எப்படி ஒன்றாக்கினார் சிவ கார்த்திக்கேயன் என்பதே இந்த நம்ம வீட்டுப் பிள்ளை.

சிவகார்த்திகேயன் தனது வழக்கமான அறிமுக பாடல் மற்றும் மாஸ் இமேஜ் எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு தங்கையின் மீது பாசத்தை கொட்டுபவராக , தங்கைக்கு என்று சொந்தப் பந்தங்களிடம் இறங்கி போகும் பாசமிகு அண்ணனாக , கிராமத்து இளைஞராக நகைச்சுவையுடன் , இதில் சென்டிமென்ட் காட்சியிலும் சிறப்பாக நடித்துள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் - கிராமத்து பெண்ணாக குறும்புதனத்துடன் துள்ளலாகவும் மற்றும் அண்ணனுக்காக உருகுவதிலும் துளசியாக நடிப்பில் மிளிர்கிறார்.

பாரதி ராஜா - பேரன் பேத்திகள் களுக்கு ஆதரவாகவும், அவ்வப்போது அறிவுரை சொல்வதிலும் தன் அனுபவ நடிப்பால் படத்திற்கு பலம் சேர்த்துள்ளார்.

சூரி மறறும் அவரது மகனாக வரும் அன்பரசு இவர்களுடன் சிவ கார்த்திகேயன் சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் அரங்கம் அதிரும் காமெடி சரவெடி .

நட்டி நட்ராஜ் : இவர் நல்லவரா / கெட்டவரா என்று புரியாத படியான கதா பாத்திரம் நிறைவாக செய்துள்ளார்.

நாயகியாக அனு இமானுவேல் அழகு பதுமையாக பாடல் மற்றும் நாயகனை சுற்றி வரும் காதல் காட்சிகளில் வந்து போகிறார்.

மற்றும் சமுத்திர கனி, ஆர்.கே.சுரேஷ், வேல ராம மூர்த்தி , சுப்பு, அர்ச்சனா இன்னும் பல நட்சத்திர பட்டாளங்கள் படத்தில் உள்ளனர்.

இமானின் இசையில் எங்க அண்ணன் மற்றும் மைலாஞ்சி பாடல்கள் இனிமை, நிரவ்ஷா வின் ஒளிப்பதிவு கிராமத்து அழகை அள்ளிக் கொடுத்துள்ளது.

இடைவேளை வரை காதல், நகைச்சுவை, அண்ணன் தங்கை உறவு என மிகவும் சுவாரசியமாக செல்கிறது கதை.

அதன் பின் அழுத்தம் இல்லாத சமுத்திரக் கனி - ஆர்.கே.சுரேஷ் பிளாஷ் பேக் , தேவையில்லாத நாயகன் -, நாயகி டூயட் பாடல், அடுத்து இது தான் நடக்கும் என்ற யூகிக்க கூடிய மற்றும் அதிரடி திருப்பங்கள் ஏதும் இல்லாத காட்சிகள் , முடிந்து விட்டது என நினைக்கும் இடத்தில் நீண்டு கொண்டு செல்லும் கிளைமாக்ஸ் என இரண்டாம் பகுதி கொஞ்சம் சறுக்கல் தான்.

ஏற்கனவே நிறைய படங்களில் பார்த்த வழக்கமான கிராமத்து கதை என்றாலும் - தனக்கே உரித்தான வழியில் விரசம் இல்லாத , நகைச்சுவையுடன் , அழகான அண்ணன் - தங்கை மற்றும் மற்ற உறவுகளை பற்றி குடும்பத்துடன் பார்க்க கூடிய விதத்தில் கொடுத்ததில் கவர்கிறார் இயக்குனர் பாண்டி ராஜ்.

நம்ம வீட்டுப் பிள்ளை - உறவுகளை தாங்கிப் பிடிக்கும் பிள்ளை ( 3/5) ...

Post a Comment

0 Comments